பாப்பரசர் லியோ XIV இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1975 செப்ரெம்பர் 6 ஆம் திகதி நிறுவப்பட்ட இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில், அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வத்திக்கானின் செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், நொவம்பர் 3ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டார்.
அவர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் முக்கிய அதிகாரிகளுடனான சந்திப்புகளின் போது, அமைதி மற்றும் உறுதித்தன்மையை நோக்கிய, முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் வகையில், பாப்பரசர் லியோ XIV இலங்கைக்கு வருகை தரக் கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மத மற்றும் இனக்குழுக்களிடையே அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் இலங்கையின் முன்னேற்றத்தால் பாப்பரசர் லியோ XIV ஈர்க்கப்பட்டதாக பேராயர் கல்லாகர் தெரிவித்துள்ளார்.
வத்திக்கானுக்கும், இலங்கைக்கும் உள்ள உறவுகளையும், பல துறைகளில் அதன் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் சிறிலங்காவுக்கு வருகை தருவது குறித்து பாப்பரசர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடைசியாக பாப்பரசர் பிரான்சிஸ் 2015 ஜனவரியில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

