3.8 C
New York
Sunday, March 29, 2026

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தரப்பை ஒன்றிணைக்கிறது சுவிஸ்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த்தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடாத்துவதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை எதிர்வரும் 19 ஆம் திகதி கொழும்பில் நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பம் மற்றும் கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதுமாத்திரமன்றி சிவில் சமூகத்தின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனுக்கு அழைப்புவிடுப்பதற்கு சுவிஸ் தூதரகம் தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது.

சுவிட்ஸர்லாந்து உயர்ஸ்தானிகர் சிறி வோல்ற்றின் மத்தியஸ்தத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தரப்புக்களும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வருவது பற்றிக் கலந்துரையாடப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles