இலங்கையில் 12 ஆண்டுகளின் பின்னர் நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கமைய, இலங்கையின் தற்போதைய அதிகாரப்பூர்வ சனத்தொகை 21,763,170 என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 1,403,731 பேர் அதிகரித்துள்ளனர்.
சனத்தொகை வளர்ச்சி
அதற்கமைய, 2012 முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையின் வருடாந்த சனத்தொகை வளர்ச்சி வீதமானது 0.5 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இம்முறை தரவுகளைச் சேகரிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்களான டேப்லட் கணினிகள் மற்றும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மாகாண ரீதியான சனத்தொகை பரம்பலை நோக்கும்போது, நாட்டின் மொத்த சனத்தொகையில் 28.1 சதவீதம் மக்களைக் கொண்டுள்ள மேல் மாகாணம் முதலிடத்தில் உள்ளது.
அதேவேளை, மிகக்குறைந்த சனத்தொகை வட மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், இது நாட்டின் மொத்த சனத்தொகையில் 5.3 சதவீதம் ஆகும்.
மாவட்ட ரீதியாக கம்பஹா மாவட்டம் (2,433,685) அதிக சனத்தொகையைக் கொண்ட மாவட்டமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சனத்தொகை அடர்த்தியில் கொழும்பு மாவட்டம் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு 3,549 பேர் வசிக்கின்றனர்.
இதற்கு நேர்மாறாக, முல்லைத்தீவு மாவட்டம் மிகக்குறைந்த சனத்தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது. அத்துடன், அங்கு ஒரு சதுர கிலோமீற்றருக்கு சராசரியாக 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

