பெருந்தொற்று காலத்தில் கோவிட் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வதற்கான திருத்தப்படாத ஒப்பந்தங்களை வெளியிட சுவிஸ் கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் (FOPH), நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
மொடெர்னா மற்றும் நோவாவக்ஸ் நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களைத் திருத்தங்கள் இன்றி வெளியிடுமாறு பிப்ரவரி மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை குறித்த இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வதில்லை என கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் முடிவு செய்துள்ளது.
கோவிட் தடுப்பூசிகளுக்காக கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் மற்றும் இராணுவ மருந்தகம் செய்துகொண்ட ஒப்பந்தங்களை, வெளிப்படைத்தன்மைச் சட்டத்தின் கீழ் அணுகுமாறு மனுதாரர்கள் கோரியிருந்தனர். இந்தக் கோரிக்கை 2023-ஆம் ஆண்டின் இறுதியில் கூட்டாட்சி அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டில், தடுப்பூசி உற்பத்தியாளர்களான மொடெர்னா, நோவாவக்ஸ், ஃபைசர், ஜோன்சென், அஸ்ட்ராஜெனெகா மற்றும் க்யூர்வேக் ஆகியவற்றுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை, அவற்றைத் திருத்திய பின்னரே கூட்டாட்சி பொது சுகாதார அலுவலகம் வெளியிட்டது.
இந்த ஒப்பந்தங்களை சுவிட்சர்லாந்தில் மட்டும் வெளியிடுவது, எதிர்காலத்தில் ஒரு பெருந்தொற்று ஏற்பட்டால் தடுப்பூசிகளை வழங்குவதில் சுவிட்சர்லாந்தை ஒரு பேச்சுவார்த்தைப் பாதகமான நிலைக்குத் தள்ளிவிடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து 2020 ஓகஸ்ட் மாதம் மொடர்னா நிறுவனத்திடமிருந்து முதல் 4.5 மில்லியன் டோஸ் தடுப்பூசிகளை முன்பதிவு செய்ய முடிந்தது. கோவிட் பெருந்தொற்றின் முடிவில், இந்த எண்ணிக்கை ஒரு டோஸுக்கு சுமார் 32 டொலர் என்ற விலையில் 31 மில்லியன் mRNA தடுப்பூசிகளாக உயர்ந்தது. இது சுமார் 980 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீட்டிற்குச் சமமாகும்.
நோவாவாக்ஸ் புரதத் தடுப்பூசியின் ஒரு மில்லியன் டோஸ்கள் டிசம்பர் 2021இல் ஒரு டோஸுக்கு 22 டொலர் என்ற விலையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசிகளுக்காக சுவிட்சர்லாந்து சுமார் 20 மில்லியன் டொலரை செலுத்தியது.
மூலம்- swissinfo

