14.5 C
New York
Saturday, May 9, 2026

கசகஸ்தானில் அவசரமாக தரையிறங்கிய சுவிஸ் விமானம் சூரிச் வந்து சேர்ந்தது.

கடந்த புதன்கிழமை கசகஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) விமானம், 221 பயணிகளுடன் நேற்றுக் காலை சூரிச்சிற்குத் திரும்பியது.

துணை விமானிக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, அந்த விமானம் மத்திய ஆசிய நாட்டில் தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த ஏர்பஸ் A350 ரக விமானம் நேற்றுக் காலை 6:45 மணிக்கு சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக, அந்த விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதன்கிழமை தென் கொரிய தலைநகர் சியோலில் இருந்து சூரிச்சிற்கு வந்து கொண்டிருந்த இந்த விமானம், துணை விமானிக்கு ஏற்பட்ட மருத்துவ அவசரநிலை காரணமாக, கசகஸ்தானின் அல்மாட்டி நகருக்குத் திருப்பி விடப்பட்டது.

விமானத்தில் இருந்த மூன்று மருத்துவர்கள் முதலுதவி அளித்த போதும். துணை விமானிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதற்காக விமானம் தரையிறங்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்திய நிலையில், அல்மாட்டியில் தரையிறங்கிய பிறகு, துணை விமானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆறு பயணிகள் அல்மாட்டியிலிருந்து தங்கள் பயணத்தை வேறு வழிகளில் தொடரத் தேர்ந்தெடுத்தனர். சூரிச்சிற்கு வந்தடைந்தவர்கள், தங்கள் இறுதி இலக்குகளைச் சென்றடைவதற்காக, அடுத்தடுத்த இணைப்பு விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டனர்.

துணை விமானி அல்மாட்டியில் தங்கியுள்ளார், ஆனால் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக ஸ்விஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொரு விமானப் பணியாளர் அவருடன் தங்கியுள்ளார்.

இந்த இடையூறுக்காக விமான நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியதுடன், தனது சக ஊழியரின் உடல்நலத்திற்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் வலியுறுத்தியது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles