சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணம், மானிப்பாய், சங்குவேலி பகுதியில் தங்கியிருந்த ஒருவர் கோரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பெருந்தொகை நகை மற்றும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சுவிஸில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஊர் திரும்பிய 66 வயதுடைய வல்லிபுரம் சந்திரசேகர் என்பவர், சங்குவேலியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
முகத்தை துணிகளால் மறைத்துக் கொண்டு குறித்த நபரின் வீட்டின் புகைக்கூடு வழியாக கொள்ளையர்கள், வீட்டிற்குள் புகுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
சுவிஸ் வாசியை சரமாரியாக வெட்டிக் கொன்று விட்டு, அணிந்திருந்த சுமார் 30 பவுண் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சம் ரூபா ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
தடயங்களை அழிக்கும் நோக்கில் கையுறைகள் அணிந்து செயல்பட்டதுடன், மோப்ப நாய் வழித்தடத்தை குழப்பும் வகையில் மிளகாய் தூள் தூவி தப்பியதாகவும் கூறப்படுகிறது.
கொள்ளையர்கள் தொலைபேசியையும் எடுத்துச் செல்லவில்லை.
குறித்த நபருடன் 14ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ள முடியாத சுவிசில் உள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அவர் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் பிரதேசத்தில் பெரும் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

