சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாநிலத்தைச் சேர்ந்த SVP கட்சியின் தேசிய மன்ற உறுப்பினரான செலின் அமோட்ரூஸ், பதவி விலகத் தயாராகும் மத்திய அரசின் உறுப்பினர் கை பார்மலின் இடத்தைப் பெறுவதற்கான தனது வேட்புமனுவை அறிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது அரசியல் தகுதிகளுடன் சேர்த்து, அவருக்கு ஒரு வயதும் மூன்று வயதும் கொண்ட இரண்டு மகள்கள் இருப்பது தற்போது அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. அமோட்ரூஸ் மத்திய அரசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிறு குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண் மத்திய அரச உறுப்பினராக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குடும்ப வாழ்க்கையையும் உயர்மட்ட அரசியல் பொறுப்பையும் ஒருங்கிணைப்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

சில ஊடகங்கள், சிறு குழந்தைகளின் தாயாக இருக்கும் ஒருவர் மத்திய அரசின் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றுவார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளன. அதேவேளை, ஒரு பெண்ணின் குடும்பப் பொறுப்புகளை மட்டும் முன்னிறுத்தி அவரது அரசியல் வாய்ப்புகளை மதிப்பிடுவது பொருத்தமற்றது என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன.
சுவிட்சர்லாந்தின் பெண்கள் அமைப்பான Alliance F, SVP கட்சி பெண்களை மட்டுமே உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலை முன்வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசில் மீண்டும் மூன்று பெண்கள் இடம்பெறுவதற்கும், அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமநிலையை ஏற்படுத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும் என அந்த அமைப்பு வலியுறுத்துகிறது
20min


