சுவிட்சர்லாந்தில் குளிர்காலம் நெருங்குவதால் மாலை நேரங்களில் விரைவாக இருள் சூழ்கிறது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வீடுகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுவதாக காப்புறுதி நிறுவனமான Helvetia வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளின் தரவுகளின்படி, ஒவ்வொரு 10,000 காப்புறுதிப் பதிவுகளுக்கும் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களின் எண்ணிக்கை 27 இலிருந்து 42 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 60 வீத உயர்வாகும்.
மேலும், 2025ஆம் ஆண்டில் ஒரு திருட்டுச் சம்பவத்தால் ஏற்பட்ட சராசரி இழப்பு 7,100 சுவிஸ் பிராங்குகளுக்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. ஆண்டின் மொத்த திருட்டுச் சம்பவங்களில் சுமார் நான்கில் ஒரு பங்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இடம்பெறுவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
வீடுகளைப் பாதுகாக்க முக்கிய அறிவுறுத்தல்கள்:
- வீட்டை விட்டு வெளியேறும்போது கதவுகளை முழுமையாகப் பூட்ட வேண்டும்.
- ஜன்னல்கள், பால்கனி மற்றும் மொட்டைமாடிக் கதவுகளைத் திறந்து வைக்கக்கூடாது.
- வீட்டில் யாரும் இல்லாதபோதும் விளக்குகளைத் தானியங்கி முறையில் எரியச் செய்யலாம்.
- விடுமுறைப் பயணங்கள் மற்றும் வீட்டில் இல்லாத நேரங்கள் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும்.
- அதிகளவு பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது.
- பாதுகாப்புப் பெட்டகங்களை எளிதில் எடுத்துச் செல்ல முடியாத வகையில் உறுதியாகப் பொருத்த வேண்டும்.
வீடுகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுவதைக் கண்டால் உடனடியாக பொலிஸாரின் அவசர இலக்கமான 117ஐத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் இருள் விரைவாகச் சூழும் நிலையில், சிறிய பாதுகாப்பு நடவடிக்கைகள்கூட பெரும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க உதவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


