ஒரு நபருக்கு ஆண்டுக்கு சராசரியாக 2,578 கிலோமீட்டர் பயணம் மற்றும் 73 ரயில் பயணங்கள் என்ற புள்ளிவிவரங்களுடன், 2025-ஆம் ஆண்டிலும் ஐரோப்பாவின் ‘ரயில் பயணச் சாம்பியன்’ என்ற பட்டத்தைத் சுவிட்சர்லாந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மற்ற நாடுகள் இதிலிருந்து வெகு தொலைவில் பின்தங்கியுள்ளன.

முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில், சுவிட்சர்லாந்தில் பயணித்த மொத்த கிலோமீட்டர் தூரம் (+2.4%) மற்றும் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை (+3.5%) ஆகிய இரண்டிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, பொதுப் போக்குவரத்து தகவல் சேவை (LITRA) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
ஒரு பயணியின் சராசரி பயணத் தூரமான 2,578 கிலோமீட்டருடன், சுவிட்சர்லாந்து தனக்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ள ஹங்கேரி, ஒஸ்ரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளை விட சுமார் 900 கிலோமீட்டர் முன்னிலையில் உள்ளது.
ஐரோப்பாவில் ரயில் பயன்பாட்டில் கிரீஸ் கடைசி இடத்தில் உள்ளது; அங்கு ஒரு பயணியின் சராசரி பயணத் தூரம் வெறும் 99 கிலோமீட்டர் மட்டுமே.
தனிநபர் ஒருவருக்கான ரயில் பயணங்களின் எண்ணிக்கையிலும் (73.4 பயணங்கள்), சுவிட்சர்லாந்து ஐரோப்பாவின் மற்ற நாடுகளை விட வெகு முன்னிலையில் உள்ளது. 45.5 பயணங்களுடன் லக்சம்பர்க் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களில் ஒஸ்ரியா (37.4 பயணங்கள்) மற்றும் ஹங்கேரி (36.1 பயணங்கள்) உள்ளன.
இருப்பினும், பரப்பளவில் சிறிய நாடான சுவிட்சர்லாந்து, ஒரு பயணத்திற்கான சராசரி தூரத்தைப் பொறுத்தவரை பின்தங்கியுள்ளது; இந்த வரிசையில் அது கடைசி இடங்களுக்கு அருகில் உள்ளது. இந்த வகையில் லிதுவேனியா முதலிடத்தில் உள்ளது (சராசரி பயணத் தூரம் 88 கி.மீ). அதற்கு அடுத்தபடியாக பிரான்ஸ் (84 கி.மீ) மற்றும் ருமேனியா (83 கி.மீ) ஆகிய நாடுகள் உள்ளன.
மூலம்- swissinfo


