ஜெனீவா நகரில் நடக்கும் 2026 உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 4வது ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
உலக செஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டி சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நவம்பர் 24 தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனான இந்தியாவின் டி குகேஷ் மற்றும் உஸ்பெகிஸ்தான் இளம் வீரர் ஜாவோகிர் சிந்தரோவ் மோதிய இந்தப் போட்டியில், இரு வீரர்களும் 34வது நகர்த்தலில் சமநிலையில் முடிக்க ஒப்புக்கொண்டனர்.
இதன் மூலம் 4 போட்டிகள் முடிவில் தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர்ந்து சமநிலையில் நீடிக்கிறது.
இதுவரை நடந்த நான்கு போட்டிகளுமே சமநிலையில் முடிந்துள்ளன.
இந்தப் போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் தொடக்கத்திலேயே ஆச்சரியம் அளித்தார். சிந்தரோவின் பெட்ரோப் தடுப்பாட்டத்திற்கு எதிராக, 5வது நகர்த்தலில் பிஷப்பை வைத்து புதுமையான வியூகம் அமைத்தார். இதற்கு பதிலளிக்க சிந்தரோவ் சுமார் 17 நிமிடங்கள் யோசித்தார்.
நடுப்பகுதி ஆட்டத்தில் குகேஷ் தொடர்ந்து தாக்குதல் பாணியில் தீவிரமாக ஆடினார். ஆனால், சிந்தரோவ் நிதானம் இழக்காமல் காய்களை அடுத்தடுத்து பரிமாற்றம் செய்து களத்தை எளிமையாக்கினார்.
போட்டியின் பிற்பாதியில் குகேஷுக்கு நேர நெருக்கடி ஏற்பட்டது. சிந்தரோவிடம் 23 நிமிடங்கள் இருந்த நிலையில், குகேஷிடம் 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. எனினும் குகேஷ் பின்வாங்காமல் ராணியை வைத்து தொடர்ச்சியாக செக் கொடுத்து மடக்க பார்த்தார்.
சிந்தரோவ் பிடி கொடுக்காமல் மிகச் சரியாக தற்காப்பு செய்தார். முடிவில் இருவரிடமும் ராணி மற்றும் 4 சிப்பாய்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. இதனால் வெற்றி வாய்ப்பு இல்லாததை உணர்ந்து 34வது நகர்த்தலில் சமநிலை செய்து கொண்டனர். குகேஷ் தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்தாலும், சிந்தரோவின் தடுப்பாட்டம் போட்டியை மீண்டும் சமனில் முடித்துள்ளது.


