16.9 C
New York
Thursday, September 11, 2025

வருமான வரி அதிகாரிகளாக நடித்து 30 இலட்சம் ரூபா கொள்ளை.

தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என அடையாளப்படுத்திய குழுவினர், யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் 30 இலட்சம் ரூபா பணத்தினை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுள்ளது.

கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றுக்கு மூவர் அடங்கிய குழு நேற்று சிவில் உடையில் சென்று , தம்மை வருமான வரி பரிசோதகர்கள் என கூறி கடையின் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு முன்னர் ,கடையின் கதவுகளை மூடி, கடையினுள் இருந்த கண்காணிப்பு கமராவில் கட்டுப்பாட்டு தொகுதியினை கழட்டி தம் வசம் எடுத்துக்கொண்டும் , கடையின் உரிமையாளர் மற்றும் , கடை ஊழியர்களின் தொலைபேசிகளை நிறுத்தி வைக்குமாறும் பணித்துள்ளனர்.

பின்னர், கடையில் சட்டவிரோதமான முறையில் பெருந்தொகை நகைகள் உள்ளதாகவும் , கணக்கில் காட்டாத பெருமளவான பணம் உள்ளதாகவும் தமக்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையிலையே விசாரணைக்கு வந்துள்ளதாக கூறி கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

அதனை தொடர்ந்து கடையினை சோதனையிட வேண்டும் என கூறி, கடையில் காணப்பட்ட நகைகள், கடையில் இருந்த 30 இலட்ச ரூபா பணம்  என்பவற்றை தாம் எடுத்து செல்வதாகவும் அவற்றினை தமது அலுவலகத்திற்கு வந்து உரிய பற்று சீட்டுக்களை, கணக்குகளை சமர்ப்பித்து அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள் என கூறி அவற்றினை எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர்.

நகைகளையும் பணத்தினையும் தாமே அலுவலகம் கொண்டு வருவதாக கடை உரிமையாளர் கூறி அவற்றை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்த போது , நகைகளை நீங்கள் கொண்டு வந்து அலுவலகத்தில் ஒப்படையுங்கள் , பணத்தினை நாம் எடுத்து செல்கின்றோம் என கூறி பணத்தினை எடுத்து சென்றுள்ளனர்.

அவர்கள் பணத்தை எடுத்து சென்ற பின்னர், கடை உரிமையாளர் சக கடை உரிமையாளர்களிடம் கூறிய போதே , வருமான வரி பரிசோதகர்கள் என கூறி வந்தவர்கள் மோசடி கும்பல் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக்கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

Related Articles

Latest Articles