விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று கைதிகள் சியோன் சிறையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8:20 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர்கள் கட்டடத்தின் கூரை வழியாக தப்பிக்க முயன்றதாக வலைஸ் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை அதிகாரிகள் உடனடியாக கன்டோனல் காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில், பேச்சுவார்த்தை குழு, தலையீட்டு குழு மற்றும் கன்டோனல் மீட்புக் குழுவைச் சேர்ந்த 35 காவல்துறை அதிகாரிகள் இணைந்து ஒரு பெரிய நடவடிக்கை ஆரம்பித்தனர்.
சியோன் தீயணைப்புத் துறை மற்றும் கன்டோனல் மீட்பு அமைப்பும் அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டன.
மதியத்திற்கு முன்னர் காவல்துறையினரால் கைதிகள் தப்பிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த முடிந்தது.
மூன்று கைதிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில், அம்புலன்ஸ் மூலம் சியோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அந்த நபர்கள் பல மாதங்களாக விசாரணைக்கு முந்தைய காவலில் இருந்தனர்.
பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மூலம்- 20min