நியூசாடெல் கன்டோனில் உள்ள Couvet இல் அஞ்சலக கிளையில் உள்ள ஒரு ஏடிஎம் நேற்று அதிகாலை வெடிக்க வைக்கப்பட்டு கொள்ளை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை 3 மணிக்குப் பின்னர் 3 வெடிப்புகள் இடம்பெற்றதாகவும், இதனால் குறிப்பிடத்தக்க சொத்து சேதம் ஏற்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து மூன்று வெடிப்புச் சத்தங்கள் கேட்டதை அடுத்து ஜன்னல் வழியாக பார்த்த போது, முகமூடி அணிந்த ஐந்து பேர் பணப் பையுடன் கொள்ளையடித்த பொருட்களை எடுத்துச் செல்வதைக் கண்டதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். அவர்கள் ஆயுதம் ஏந்தியிருந்தார்களா என்று எனக்குத் தெரியாததால் மக்களின் கவனத்தை ஈர்க்க நான் விரும்பவில்லை.
குற்றவாளிகள் முகமூடி அணிந்திருந்ததால் எந்த முகங்களையும் அடையாளம் காணவில்லை: ஆனால் அவர்கள் தொழில் வல்லுநர்கள் போல் இருந்தார்கள்,” என்றும் அவர் கூறினார்.
இந்த வெடிப்பு அஞ்சலக கட்டிடத்திற்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது.
வீதியில் உள்ள கட்டிடங்களும் சேதமடைந்தன, பல ஜன்னல்கள் உடைந்தன.
குற்றவாளிகள் பிரெஞ்சு எல்லையை நோக்கி ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றனர் என்று, நியூசாடெல் கன்டோனல் காவல்துறை தெரிவித்துள்ளது.
அவர்களால் கைவிட்டுச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் சம்பவ இடத்திலேயே சிறப்பு பொலிஸ் படையினரால் செயலிழக்க செய்யப்பட்டன.
சம்பவம் நடந்த பத்து நிமிடங்களுக்குப் பின்னரே பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
“அவர்கள் சுற்றுப்புறத்தில் இருந்தவர்களை வெளியேற்றினர். குண்டை செயலிழக்கச் செய்யும் வரை காலை 7:30 மணி வரை நாங்கள் ஒரு பாதுகாப்பான அறையில் தங்க வேண்டியிருந்தது,” என்றும் அயலில் உள்ள பெண் தெரிவித்துள்ளார்.
மூலம்- 20min