ஸ்வாட்ச் மற்றும் ஆடம்ஸ் பிகே நிறுவனங்களின் புதிய றோயல் பொப் கடிகாரங்கள் தொடர்பான பெரும் எதிர்பார்ப்பு, சனிக்கிழமையன்று பல சுவிஸ் நகரங்களில் குழப்பமான நிலைமைகளை ஏற்படுத்தியது.
முந்தைய நாள் இரவே கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் உருவாகின. பெரிதும் விரும்பப்படும் 80-களின் பாணியிலான அந்த பொக்கெட் கடிகாரங்களில் ஒன்றைப் பெறுவதற்காக சில ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஆனால், எல்லோரும் கடிகாரத்துடன் வீடு திரும்பவில்லை.
பீல் நகரில் உள்ள ஸ்வாட்ச் தலைமையகத்தின் முன்பாகக் கூட்டம் குறிப்பாக அதிகமாக இருந்தது. 22 வயதான ஒருவரும் , அவரது தந்தையும், உறவினரும் கடைக்கு முன்பாகக் காத்திருந்தனர்.
“வெள்ளிக்கிழமை, நாங்கள் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை அங்கே இருந்தோம், அதன் பிறகு, நாளும் தந்தையும் வீட்டிற்குச் சென்றோம். உறவினர் காரில் உறங்கினார். சனிக்கிழமை காலை 6 மணிக்கெல்லாம் மீண்டும் அங்கே இருந்தோம்.
முந்தைய நாள் வரிசையில் பின்னால் நின்றவர்கள் திடீரென எங்களுக்கு முன்னால் நின்றனர். பிறகு அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சென்று, நாங்கள் தள்ளுவதாகக் குற்றம்சாட்டினர்.
மற்ற வாடிக்கையாளர்களால் கைக்கடிகாரங்களை வாங்க முடிந்தபோதிலும், நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டு வெறுங்கையுடன் திரும்பினோம். இது வருத்தமளிக்கிறது.” என 22 வயதுப் பெண் தெரிவித்துள்ளார்.
மற்றொருவரின் கூற்றுப்படி, சூரிச்சில் உள்ள கிளாட்சென்ட்ரம் வணிக வளாகத்திலும் குழப்பமான காட்சிகள் அரங்கேறின: “காலை ஆறு மணிக்கு, அனைவரும் உள்ளே விரைந்து செல்ல, ஒரு வரிசை உருவானது .
ஆரம்பத்தில், எனக்கு முன்னால் சுமார் 40 பேர் இருந்ததால், நிலைமை அமைதியாக இருந்தது. இருப்பினும், பின்னர், ஒரு இளைஞர் குழு அங்கு வந்து, தாங்கள் அன்றிரவு அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறியது. தங்களை முதலில் உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
காலை 8 மணியளவில், நிலைமை மோசமடைந்தது. “அந்தப் பதின்வயதினர் ஆர்ப்பாட்டமாக வரிசையின் முன்பகுதிக்குச் சென்றனர். இது பாதுகாப்புப் பணியாளர்களுடன் மோதல்களுக்கு வழிவகுத்தது; நிலைமை குழப்பமாக மாறியது.
என்னால் பெரிதும் விரும்பப்பட்ட அந்தக் கைக்கடிகாரங்களில் எதையும் இறுதியில் வாங்க முடியவில்லை.
சுமார் 5,000 பேர் வருவார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.” பாதுகாப்புக் குழுவினர் நிலைமையைக் கையாண்ட விதம் பேரழிவாக இருந்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆரவாரம் இப்போது இணைய விற்பனைத் தளங்களிலும் தெளிவாகத் தெரிகிறது. ரிக்கார்டோவில், தனிப்பட்ட மாடல்கள் ஏற்கனவே பல ஆயிரம் சுவிஸ் பிராங்குகளுக்கு வழங்கப்படுகின்றன. சில சலுகைகள் சுமார் 800 பிராங்குகளாக இருக்கும்போது, மற்ற விற்பனையாளர்கள் ஒரு கடிகாரத்திற்கு 6,500 பிராங்குகள் வரை கேட்கிறார்கள்.
இது, 350 சுவிஸ் பிராங்குகள் என்ற அசல் விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது 1800 சதவீதத்திற்கும் அதிகமான விலை உயர்வாகும்.
மூலம்- 20min

