மும்பையில் இருந்து 231 பயணிகளுடன் சூரிச் புறப்பட்ட விமானம், சுமார் 20 தொன் எரிபொருளை வானில் எரித்த பின்னர்,மீண்டும் மும்பையிலேயே தரையிறங்கியுள்ளது.
மும்பையிலிருந்து LX155 என்ற சுவிஸ் விமானம் சுவிஸ் நேரப்படி நேற்றுமுன்தினம் இரவு 9:34 மணிக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டது, ஆனால் 5 மணி 20 நிமிடங்களுக்குப் பின்னர் மும்பையில் உள்ள அதன் புறப்பட்ட விமான நிலையத்திலேயே மீண்டும் தரையிறங்கியது.
ஆரம்பத்தில், விமானம் திட்டமிட்டபடி பயணித்த போதும், இரண்டு மணி நேர பயணத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் எல்லையை அடைவதற்குச் சற்று முன்னதாக விமானிகள் விமானத்தைத் திருப்பினர்.
விமானத்தின் மின்சார அமைப்பில் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டு அதனை சீர்படுத்தும் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இதன் பின்னர் ஏர்பஸ் ஏ330 மும்பைக்குத் திரும்பியது. இருப்பினும், தரையிறங்குவதற்கு முன்பு, அந்த விமானம் அரபிக்கடலுக்கு மேலே 130 நிமிடங்கள் வட்டமிட வேண்டியிருந்தது. அது கிட்டத்தட்ட 4,000 மீட்டர் உயரத்தில் மொத்தம் 15 தடவைகள் வட்டமடித்துள்ளது.
ஏர்பஸ் ஏ330-ல் காற்றில் எரிபொருளை வெளியேற்றும் அமைப்பு இல்லை. எனவே, நீண்ட நேரம் வட்டமிடுவதன் மூலம் எரிபொருளை எரிக்க வேண்டியிருந்தது.
வட்டமிட்டதால் அதன் எடை சுமார் 20 தொன் குறைந்தது. அந்த விமானம் இறுதியாக அதிகாலை 4:55 மணிக்கு (CEST) மும்பையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
இந்தச் சம்பவத்தால் 231 பயணிகளுக்கு நீண்ட தாமதம் ஏற்பட்டது. பெரும்பாலான பயணிகள் அதே நாளில் அல்லது அதே இரவில் மாற்று விமானங்களில் மீண்டும் முன்பதிவு செய்யப்பட்டனர்.
மூலம்- swissinfo

