20.2 C
New York
Monday, June 22, 2026

வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் இடையே 18 மணிநேர தீவிர அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு

பர்கன்ஸ்டாக் (சுவிட்சர்லாந்து): மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக் நகரில் நடைபெற்ற 18 மணிநேர தீவிர அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஈரானிய தூதுக்குழுவினர் தங்களின் தலைநகரான தெஹ்ரானுக்குப் புறப்பட்டுள்ளனர்.

கத்தார் மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் முக்கிய மத்தியஸ்தத்தில் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுவார்த்தையில், உலக வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பது குறித்தும், லெபனானில் நடந்து வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் இரு நாடுகளும் முக்கியத் தொடர்பு வழிகளை அமைக்க உடன்பட்டுள்ளன.

மேலும், இறுதி அமைதி ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் அடுத்த 60 நாட்களுக்கான கூட்டுத் திட்ட வரைபடத்திற்கும் (Roadmap) இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தொடங்கிய இப்பேச்சுவார்த்தையில், அமெரிக்கத் தரப்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் ஆலோசகர் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் பங்கேற்றனர்.

துவக்கத்தில் கடுமையான விவாதங்கள் மற்றும் பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தை “சாதகமான முறையில்” முடிவடைந்துள்ளதாக மத்தியஸ்த நாடுகள் தெரிவித்துள்ளன. முக்கிய அதிகாரிகள் நாடு திரும்பினாலும், தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்த அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் இந்த வார இறுதிக்குள் சுவிட்சர்லாந்திலேயே தொடரவுள்ளன.


Related Articles

Latest Articles