15.6 C
New York
Tuesday, October 6, 2026

பிரான்சில் 3 பிள்ளைகளின் தாயான தமிழ்ப் பெண் கொலை- கணவன் கைது.

பிரான்சின் ஈவ்லின் (Yvelines ) மாவட்டத்திலுள்ள ஆஷேர் (Achères) பகுதியில், 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான அனுஷா என்பவர் அவரது வீட்டில் கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது 47 வயதுடைய கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் அவசர உதவிச் சேவையினரைத் (Samu) தொடர்புகொண்ட கணவன் தனது மனைவியைத் தான் கொலை செய்துவிட்டதாகக் குற்றமொப்புதல் செய்துள்ளார்.

மான்ந் -லா-ஜொலி (Mantes-la-Jolie) பகுதியில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையிலேயே அவர் இந்த அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும், பின்னர் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ஆஷேர் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்திற்கு உடனடியாக விரைந்த காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும், வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட அனுஷாவின் சடலத்தை மீட்டனர். அவர் சில மணிநேரங்களுக்கு முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அமைதியான அந்த குடியிருப்பில் இடம்பெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் அயலவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“அனுஷா மிகவும் அமைதியானவர், மென்மையான குணமுடையவர்; அவர்கள் குடும்பமும் எவ்விதப் பிரச்சனைகளுமற்ற முன்னுதாரணமான குடும்பமாகவே காணப்பட்டது” எனத் தெரிவிக்கும் அயலவர்கள், சனிக்கிழமை காலையில் காவல்துறையினரின் குவிப்பைக் கண்ட பின்னரே இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்து உறைந்துபோயுள்ளனர்.

கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டமை தொடர்பான இந்த வழக்கை வெர்சாய் (Versailles) மாவட்ட அரச சட்டத்தரணி அலுவலகம் உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளைச் குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் (division de la criminalité territoriale) ஒப்படைத்துள்ளது.

பிரான்சில் குடும்ப வன்முறைகளால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 107 பெண்கள் தமது கணவர் அல்லது முன்னாள் கணவரால் கொல்லப்பட்டுள்ளனர். இது 2023 ஆம் ஆண்டை விட 11 சதவீத அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles