சுவிட்சர்லாந்தின் செயின்ட் காலன் மாநிலத்தில் உள்ள அல்ட்ஸ்டாட்டன் (Altstätten) பகுதியில், பயணிகள் பேருந்து இரண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மற்றும் கட்டடம் ஒன்றின் முன்புறக் கூரையில் மோதியதில் சுமார் 90,000 சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை 5.30 மணிக்குப் பின்னர், சூரர் வீதியில் (Churerstrasse) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய பெண் பேருந்து சாரதி, பேருந்து நிலையத்திலிருந்து ரிங்வீதியை (Ringgasse) நோக்கிப் பேருந்தை இயக்க முற்பட்டபோது, ஏற்பட்டிருக்கக்கூடிய தொழில்நுட்ப இயக்கத் தவறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என செயின்ட் காலன் மாநிலக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் பேருந்து சாரதி அதிர்ச்சிக்கு உள்ளானதாகவும், பேருந்தில் பயணித்தவர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதம் ஆரம்பக் கணிப்பின்படி சுமார் 90,000 சுவிஸ் பிராங்குகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


