பொருளாதாரக் கவலைகள், எரிசக்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் வட்டி வீத உயர்வு ஆகியவை வணிகங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதன் விளைவாக, உலகம் முழுவதும் நிறுவனங்களின் வங்குரோத்தாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
சுவிட்சர்லாந்தில், நிறுவனங்களின் வங்குரோத்தாகும் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டக்கூடும் என்று ‘அலியான்ஸ் டிரேட்’ (Allianz Trade) நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இதற்கு, சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வந்துள்ள புதிய வங்குரோத்து சட்டமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
2026-ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நிறுவனங்கள் வங்குரோதாகும் நிகழ்வுகள் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக அதிகரிக்கும் என்று ‘அலியான்ஸ் டிரேட்’ நிபுணர்கள் கணிக்கின்றனர்.
15,000 நிறுவனங்கள் வங்குரோதாகும் சூழல் ஏற்படலாம்; இது ஒரு வரலாற்று உச்சமாகும். இது 2022-ஆம் ஆண்டை விட இருமடங்காகவும், பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தை விட மும்மடங்காகவும் இருக்கும்.
இந்தத் தகவல்கள், வர்த்தகக் கடன் காப்பீட்டு நிறுவனமான ‘அலியான்ஸ் டிரேட்’ செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ‘வங்குரோத்து அறிக்கை’யில் (Insolvency Report) குறிப்பிடப்பட்டுள்ளன.
இருப்பினும், இத்தகைய “முன்னெப்போதும் இல்லாத” அளவிலான வங்குரோத்து நிகழ்வுகளுக்கு, நிறுவனங்கள் எதிர்கொள்ளும் மேக்ரோ பொருளாதார மற்றும் நிதிச் சவால்கள் மட்டுமே முழுக்காரணமல்ல. ‘அலியான்ஸ் டிரேட்’ சுவிட்சர்லாந்து பிரிவின் தலைவர் ஜான் மோல்மேன் (Jan Möllmann) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “2025 முதல் அமலில் உள்ள புதிய வங்குரோத்து சட்டமே, இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான திவால் நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த புதிய சட்டமானது, தானாகவே வங்குரோத்து நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். “2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளில், இந்த புதிய, உயர்ந்த நிலையில் நிலைமை சீராகும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.”
அந்த ஆய்வின்படி, 2025-ஆம் ஆண்டில் 6% அதிகரித்திருந்த நிறுவனங்களின் வங்குரோத்து நிகழ்வுகள், 2026-இல் மேலும் 5%-ம், 2027-இல் கூடுதலாக 1%-ம் அதிகரிக்கக்கூடும். புவிசார் அரசியல் மற்றும் மேக்ரோ பொருளாதாரச் சூழலில் நிலவும் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையால், வங்குரோத்து நிகழ்வுகளின் உச்சம் ஒரு ஆண்டு தள்ளிப்போய், 2028-இல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பிறகு, வங்குரோத்தாகும் நிறுவனங்களின் எண்ணிக்கை சற்று குறையக்கூடும்.
மூலம்- swissinfo


