சுவிஸ் சூப்பர் மார்க்கெட் சங்கிலித் தொடரான ’மைக்ரோஸ்’ (Migros)-இல், அதன் பிராந்திய கூட்டுறவு அமைப்புகளை ஒன்றிணைக்கும் திட்டத்தால் ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் ஏற்படாது என்று அதன் தலைவர் மரியோ இர்மிங்கர் தெரிவித்துள்ளார்.
“ஊடகங்களில் தவறான புள்ளிவிவரங்கள் பரப்பப்படுகின்றன,” என்று அவர் ‘நியூ சூரிச்சர் சைடுங்’ (NZZ) நாளிதழிடம் கூறினார்.

“நிச்சயமாக ஆயிரக்கணக்கான வேலைகள் பறிபோகும் நிலை இல்லை. இத்தகைய மதிப்பீடுகள், 25 ஆண்டுகளுக்கு முன்பு ‘கூப்’ (Coop) நிறுவனத்தில் நடந்த இணைப்பு குறித்த ஆய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மைக்ரோஸ் நிறுவனத்தின் சூழல் முற்றிலும் மாறுபட்டது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘சோன்டாக்ஸ் சைடுங்’ (SonntagsZeitung) நாளிதழ், இந்த இணைப்பு மூலம் ஆண்டுக்கு 300 மில்லியன் முதல் 400 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் (CHF) வரை சேமிக்கப்படலாம் என்றும், இதற்காக 3,000 பணியிடங்கள் குறைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
‘NZZ’ நாளிதழின் சொந்தக் கணக்கீட்டின்படி, நிர்வாகப் பிரிவில் 400 முதல் 600 பணியிடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
“தற்போதைய நிலையில், இத்தகைய புள்ளிவிவரங்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை,” என்று இர்மிங்கர் கூறினார்.
“ஒன்று மட்டும் உறுதி: நிர்வாக மற்றும் மேலாண்மை மட்டங்களில், காலப்போக்கில் தேவையற்ற இரட்டை அமைப்புகள் (parallel structures) நீக்கப்படும். மைக்ரோஸ் சூப்பர் மார்க்கெட்டுகளில் 55,000 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். நிறுவனத்திற்குள் ஏற்படும் பணியாளர் மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10,000 புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டிய தேவை உள்ளது.”
“எங்கள் வணிகத்தை நிர்வகிக்கத் தேவையான நிபுணர்கள் போதிய அளவில் கிடைக்காமல் போய்விடுமோ என்பதுதான் எங்கள் கவலை.” என்றும் அவர் கூறினார்.
இர்மிங்கர் அடுத்த கோடையில் நிறுவனத்திலிருந்து விலகவுள்ளார். “கடந்த சில மாதங்கள் மிகவும் தீவிரமானவை. நான் ஓய்வு பெற்ற பிறகும் இந்த மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறும்,” என்று அவர் கூறினார்.
இந்த இணைப்புத் திட்டம் நடைமுறைக்கு வர வேண்டுமானால், பத்து பிராந்திய கூட்டுறவு அமைப்புகளின் ஒப்புதலும், அதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையும், குறைந்தபட்சம் 25 சதவீத வாக்குப்பதிவும் தேவைப்படும்.
மூலம்- swissinfo


