மாமனிதர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு, 22.11.2026 ஞாயிற்றுக்கிழமை, சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் அவர்களுக்கும் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் இணுவையூர் மயூரனின் தொகுப்பில் நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் ஆரம்பமாக, மாமனிதர் சிவாஜிலிங்கம் அவர்களுக்கான நினைவுச் சுடரினைத் தற்காப்புக் கலை ஆசிரியர் திரு. விபுலானந்தன் கௌரிதாசன் அவர்கள் ஏற்றி வைத்தார். மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவுச் சுடரினைத் திரு. இராமநாதன் பவான் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து, மலர் வணக்க நிகழ்வினை சுவிற்சர்லாந்தின் செங்காளன் நகரப் பாராளுமன்றத் தலைவர் திரு. துரைராஜா ஜெயக்குமார் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்துகொண்ட ஏனையோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
மாமனிதர் சிவாஜிலிங்கம் அவர்களின் நினைவுரையைச் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் திரு. அசோக் அவர்கள் ஆற்றினார். மேலும், அவரின் உதவியாளராகப் பணியாற்றிய திரு. ரவீந்திரன் அவர்கள், சிவாஜிலிங்கம் அவர்களுடனான தனது அனுபவங்களையும் நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார்.
தொடர்ந்து, லுற்சேர்ன் துர்க்கை அம்மன் ஆலயம், லுற்சேர்ன் ஆன்மீகப் பணியகம் ஆகியவற்றின் சார்பிலான பிரதிநிதிகளும் ஏனையோரும் நினைவுரைகளை நிகழ்த்தினர்.
மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகராசா சபேஸ்வரன் அவர்களின் நினைவுரையைச் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் திரு. ஜெராட் அவர்கள் ஆற்றினார்.
இரு ஆளுமைகளின் சமூகப் பங்களிப்புகளையும் பணிகளையும் நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு, அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவுப் பகிர்வாக அமைந்தது.








