மட்டக்களப்பு -திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை திறந்து வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு பணிகளையும் மேற்கொண்டார்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்துக்கும் சென்று பார்வையிட்டதுடன் அதன் புனர்நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.