18.2 C
New York
Thursday, September 11, 2025

டிசினோவுக்கு எச்சரிக்கை- சுவிசில் ஆட்டம் போடும் பேய் மழை.

டிசினோ கன்டோனில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிராட்டோ சோர்னிகோ மற்றும் மாகியா பள்ளத்தாக்கில், ஆற்றின் அருகே வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, உயரமான பகுதிகளில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பியானோ டி பெசியாவிலும் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Val Onsernone, Val Lavizzara மற்றும் Val Maggia பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்தால் பாதாள அறைகள் அல்லது நிலத்தடி தரிப்பிடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் கார்கள் அல்லது சைக்கிள்களை ஓட்டுவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

நள்ளிரவில், சுவிட்சர்லாந்தில் இரண்டு இடியுடன் கூடிய மழை மையங்கள் இருந்ததாக,  Meteo News Switzerland சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.

ஒன்று ஜெனீவா ஏரிக்கும் Neuchâtel ஏரிக்கும் இடையே காணப்படுகிறது. மற்றொன்று வலஸ் மற்றும் டிசினோ மீது மையம் கொண்டுள்ளது.

மழைப்பொழிவு சுவிட்சர்லாந்தின் தெற்கிலிருந்து வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி நகருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெய்த கன மழையினால் மீண்டும் சேமாட் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஒருவாரத்துக்கு முன்னர் கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதி மீண்டும் வெள்ள அபாயத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதேவேளை மண்சரிவினால் புர்கா ஸ்ட்றீம் ரயில் பாதை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10,000 க்கும் அதிகமான மின்னல் தாக்குதல்கள் ஆல்ப்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, Meteo Switzerland பற்றிய ஆரம்ப அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ரைட்-பிரிக் மற்றும் சிம்ப்ளான் பாஸ் இடையேயான சிம்ப்ளான் வீதியின் ஒரு பகுதி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலச்சரிவில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 7 மணி முதல் சிம்ப்ளான் பாதை முழுவதையும் மூடவும் கன்டோன் முடிவு செய்துள்ளது.

Related Articles

Latest Articles