இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த நொவம்பர் 14ஆம் திகதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால், சபாநாயகராகப் பிரேரிக்கப்பட்ட அசோக ரன்வல, நொவம்பர் 21ஆம் திகதி முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகராக பதவியேற்றார்.
அவர் 23 நாட்களில் பதவியில் இருந்து விலகியுள்ளார். இலங்கையில் குறுகிய காலம் சபாநாயகராக இருந்தவர் இவராவார்.
சபாநாயகராக பதவியேற்ற போதும், தேர்தல் பிரசாரத்தின் போதும், ஜப்பானின் வகேடா பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றதாக வெளிப்படுத்தியிருந்தார்.
அவரது கலாநிதிப் பட்டம் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அதனை நிரூபிக்க முடியாத நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் இறங்கியிருந்தன.
இந்த நிலையில் அவர் இன்று மாலை பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.