இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போதும் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நேற்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அவர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், CT scan பரிசோதனையில் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை வைத்திய நிபுணர்கள் கண்டறிந்தனர்.
அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என்று மருத்துவர் சத்தியமூர்த்தி சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்றுக்காலை வீட்டில் இருந்த போது, மாவை சேனாதிராஜா நினைவிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், யாழ். போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவை, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டனர்.
அத்துடன், அவரது மகன் கலையமுதன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.