இலங்கையில் நேற்று நடந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் கடுமையான சவாலுக்கு மத்தியில் தமிழரசு கட்சி தனித்து, புதுக்குடியிருப்பு, வெருகல், கரைச்சி, பூநகரி பிரதேச சபைகளை கைப்பற்றியுள்ளது.
யாழ்ப்பாணம், திருகோணமலை மாநகர சபைகள், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை நகர சபைகள் உள்ளிட்ட பெரும்பாலான பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய பேரவை, சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, மான் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் மக்கள் கூட்டணி என்பன வெற்றி பெற்றுள்ளன.
தமிழ்ப் பகுதிகளில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாக இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரம் கட்டும் நோக்கில் தேர்தல் விதிமீறல்களிலும், அரச அதிகாரங்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தியும், பிரசாரத்தில் ஈடுபட்ட தேசிய மக்கள் சக்தி இந்த தேர்தலில் வடக்கு கிழக்கில் படுதோல்வி அடைந்துள்ளது.
தமிழ்த் தேசிய கட்சிகள் 4 அணிகளாக போட்டியிட்ட போதும்,அதிக வாக்குகளையும், ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 2,710,387 (43.54%) வாக்குகளைப் பெற்று, 2367 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 1,280,116 (20.56%) வாக்குகளைக் கைப்பற்றி, 1007 ஆசனங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன, 609,118 (9.78%) வாக்குகளுடன், 470 ஆசனங்களை கைப்பற்றி மூன்றாமிடத்தில் உள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு, 278,928 (4.48%) வாக்குகளுடன் 219 ஆசனங்களும், பொதுஜன முன்னணிக்கு 235,086 (3.78%) வாக்குகளுடன், 186 ஆசனங்களும், கிடைத்துள்ளன.
தமிழரசுக் கட்சி 234,305 (3.58%) வாக்குகளுடன், 311 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, 84,669 (1.29%) வாக்குகளுடன், 102 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,
66,956 (1.02%) வாக்குகளுடன் 97 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.