யாழ்ப்பாணம்- இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று பட்டப்பகலில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பைச் சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனையைச் சேர்ந்த 22 வயது இளைஞனும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காதலித்துத் திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.
இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையிலும், அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்து விட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு முடிந்து வந்து கொண்டிருந்த போது நேற்றுப் பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கி விட்டு, யுவதியை வாகனம் ஒன்றில் பலவந்தமாக கடத்திச் சென்றனர்.
இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொண்டுள்ள தெல்லிப்பழை பொலிஸார் யுவதியைத் தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.