-2.9 C
New York
Sunday, December 28, 2025

சூறாவளி தணிந்தாலும் அபாய நிலை தொடர்கின்றது – வளிமண்டலவியல் திணைக்களம்

சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது. இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இது தவிர மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார்.

சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார்.

அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார்.

இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும்போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles