கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் பேருந்துடன் கார் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், காரில் பயணித்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை சங்கரநாராயணர் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பேருந்துடன், விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது காருக்குள் சிக்கி நசுங்கிய நிலையில் இருந்த இருவரது உடல்கள் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில், சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் விசுவமடு பகுதியைச் சேர்ந்த பொன்னையா பூபாலன் (46 வயது) , சந்திரகுமார் சவேந்திரன் (வயது 34), புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன்(வயது 36) , அதே பகுதியைச் சேர்ந்த யுவானி பிரசாத் (வயது 34) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

