வலாய்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 42 வயது மற்றும் 41 வயதுடைய இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் காயமடைந்தார்.
நேற்றுமுன்தினம் மதியம் 12.15 மணியளவில், சாமோசன் நகராட்சியில் உள்ள பொயிண்ட் டி கீமோ பகுதியில் நான்கு சுற்றுலாப் பயணிகள் குழு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, சுமார் 2,500 மீட்டர் உயரத்தில், ஒரு பனிச்சரிவு ஏற்பட்டு அவர்களில் மூவரை இழுத்துச் சென்றது.
நான்காவது சுற்றுலாப் பயணி தகவல் அளித்ததை அடுத்து, ஏர்-கிளேசியர்ஸின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மற்றும் ஏர் ஜெர்மாட்டின் ஒரு விமானம் என்பன அனுப்பி வைக்கப்பட்டன.
கன்டோனல் வலாய்ஸ் மீட்பு அமைப்பின் (KWRO) மீட்புக் குழுக்கள், பனிச்சரிவில் புதைந்திருந்த இரண்டு பேரைக் கண்டுபிடித்து மீட்டது.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதிலும், விபத்து நடந்த இடத்தில் 42 வயது நபர் ஒருவர் இறந்தார். 41 வயது நபர் காயமடைந்து ஹெலிகொப்டர் மூலம் பெர்ன் இன்செல்ஸ்பிட்டலுக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் நேற்று மரணமானார்.
53 வயது பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் ஹெலிகொப்டர் மூலம் சியோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மூவரும் சுவிஸ் நாட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

