2.5 C
New York
Thursday, April 9, 2026

கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காட்டுத் தீ- துண்டிக்கப்பட்ட நிலையில் கிராமம்.

கிராபுண்டன் மாகாணத்தில் உள்ள புரூசியோ நகராட்சியில் ஏற்பட்ட காட்டுத்தீ, புதன்கிழமை காலை அவசரகாலக் குழுவினரால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தீயணைப்புப் பணிக்கு ஆதரவளிக்க, ஸ்விஸ் ஹெலிகொப்டர் மற்றும் ஹெலி பெர்னினா நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து ஹெலிகொப்டர்களும், ஒரு ராணுவ சூப்பர் பூமா ஹெலிகொப்டரும் பயன்படுத்தப்பட்டன.

மாற்றுப் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், மறு அறிவிப்பு வரும் வரை ராய்டியன் ரயில் பாதை மூடப்பட்டுள்ளது.

புரூசியோ வட்ட மேம்பாலத்திற்கு அருகே ஏற்பட்ட இந்தத் தீ, கம்பாசியோ மற்றும் வியானோவிற்கு இடையில் சுமார் இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவைப் பாதித்துள்ளது.

வெப்பப் படமெடுக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன் மூலம், எஞ்சியிருக்கும் தீப்பொறிகளைக் கண்டறியு்ம் முயற்சிகள் மேற்காள்ளப்படவுள்ளன என்று இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் புரூசியோவின் மேயர் பியட்ரோ டெல்லா கா, உறுதிப்படுத்தினார்.

ராய்டியன் ரயில் சேவைகள் இன்னும் இடைநிறுத்தப்பட்டுள்ளன, மேலும் வியானோ கிராமத்திற்குச் செல்லும் சாலையும் செவ்வாய்க்கிழமை மாலை முதல் மூடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் நண்பகல் வரை, சுமார் 60 பேர் வசிக்கும் அந்தக் கிராமத்தை ஒரு காட்டுப் பாதை வழியாக மட்டுமே அடைய முடிந்தது. யாரும் வெளியேற்றப்பட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:40 மணிக்கு காட்டுத் தீ பற்றிய தகவல் கிடைத்ததாக கிராபுண்டன் மாகாண காவல்துறை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இரவு முழுவதும் தீயணைப்புக் குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில், புதன்கிழமை காலை தீயணைப்புப் பணிகள் மீண்டும் தொடங்கின.

தீயணைப்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, கூட்டாட்சி சிவில் விமானப் போக்குவரத்து அலுவலகம் வியாழக்கிழமை மாலை வரை தற்காலிக வான்வெளி மூடலுக்கு உத்தரவிட்டது.

சட்டப்பூர்வமாக மரக்கழிவுகளை எரித்தபோது தீ தொடங்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், சமீபத்திய நாட்களில் நிலவிய வறண்ட மற்றும் காற்று வீசும் சூழல் காரணமாக தீ பரவி, பள்ளத்தாக்கு முழுவதையும் மூடிய அடர்த்தியான புகை மேகத்தை உருவாக்கியதாக நம்பப்படுகிறது.

கிராபுண்டன் மாகாண காவல்துறை இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

புதன்கிழமை காலை, கிராபுண்டனின் இத்தாலிய மொழி பேசும் பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளத்தாக்குகளிலும் திறந்தவெளித் தீ மூட்டுவதற்கு அலர்ட்விஸ் முழுமையான தடை விதித்தது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles