சுவிட்சர்லாந்தில் இரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணித்து, அதிகாரிகளிடம் போலி அடையாள அட்டையை காண்பித்து ஏமாற்ற முயன்ற நபருக்கு 20,000 சுவிஸ் பிராங்குகள் (சுமார் 20 லட்சம் இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் கூட்டாட்சி ரயில்வே (SBB) அதிகாரிகளால் அந்த நபர் பயணச்சீட்டு சோதனையின் போது பிடிபட்டார். அப்போது தப்பிப்பதற்காக, அவர் ஒரு அடையாள அட்டையை காண்பித்து போலிப் பெயரில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், அவர் காட்டிய அடையாள அட்டை ஏற்கனவே திருடப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
அவர் காட்டிய போலி முகவரிக்கு SBB நிர்வாகம் கடிதம் அனுப்பியபோது, அந்த அடையாள அட்டையின் உண்மையான உரிமையாளர் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என ஆட்சேபனை தெரிவித்தார். இதன் விளைவாக, அந்த நபர் அடையாள ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தது மற்றும் அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தியது ஆகிய குற்றங்களுக்காகச் சிக்கினார்.
ஷ்விட்ஸ் (Schwyz) அரசு வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. இந்த நபர் ஏற்கனவே அக்டோபர் 2023-ல் போக்குவரத்து விதிமீறல் மற்றும் போதையில் வாகனம் ஓட்டியதற்காக 14,500 பிராங்குகள் ‘ஒத்திவைக்கப்பட்ட அபராதம்’ (Suspended fine) பெற்றிருந்தார். தற்போது நன்னடத்தை காலத்தில் மீண்டும் குற்றம் செய்ததால், பழைய அபராதமும் புதிய தண்டனையுடன் சேர்க்கப்பட்டது.

