இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால், 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை, கொழும்பில் உள்ள இல்லத்தில் அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

அரச வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாவைப் பெற்று, அந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான விதிகளின் கீழ் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஷிரந்திர ராஜபக்ச தலைமையில் இயங்கிய சிரிலிய சவியா அமைப்பு சம்பந்தப்பட்ட நிதி நடவடிக்கைகளுடனும் இந்த விசாரணை தொடர்புடையது.
விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து ஷிரந்தி ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
அங்கு அவர் விசேட பாதுகாப்புடன் தனியான இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெலிக்கடைச் சிறைச்சாலையில் ஷிரந்தி ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


