தனது வீட்டில் நூற்றுக்கணக்கான தங்கக் கட்டிகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்ட முன்னாள் சிஐஏ அதிகாரி, தற்போது அமெரிக்க அரசிடம் சுமார் 20 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 1,935 கோடி) மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
போலி ஒப்பந்தங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் மூலம் இந்தப் பெரும் மோசடி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

49 வயதான டேவிட் ரஷ், ஒப்பந்த நிபந்தனைகளின்படி அமெரிக்க அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய ஆடம்பர வீடுகள், கார்கள், விலையுயர்ந்த கடிகாரங்கள் உள்ளிட்ட சொத்துகளையும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு ரகசியத் தகவல்களை வழங்கியதையும் ரஷ் ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்குக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை விளக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில், “குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து கேட்பதற்காக பிபிசி, டேவிட் ரஷ்-இன் வழக்கறிஞரைத் தொடர்புகொண்டது. ஆனால், அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
டேவிட் ரஷ் மீது ஆரம்பத்தில் அரசுப் பணத்தைத் திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், தற்போது அவர் ‘வயர் ஃபிராட்’ (Wire Fraud) எனப்படும் மின்னணு தகவல் தொடர்பு வழியிலான மோசடிக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டபோது, அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 298 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை “பணித் தேவைகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக” தனக்கு வழங்கப்பட்டவை என்று ரஷ் கூறியிருந்தார்.


