சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் அறிவியலை விமர்சித்துள்ளனர்; குறிப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் இது தீவிரமாக இருந்தது.
இந்த நிலையில் ஜெனிவாவில், உலக சுகாதார நிறுவனம் (WHO) வரும் செவ்வாய்க்கிழமை “அறிவியல் மற்றும் ஆரோக்கியத்திற்காக ஒன்றிணைவோம்” (Together for Science and Health) என்ற புதிய முன்னெடுப்பைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளது.

“நம்பிக்கை இழப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளது” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சில்வி பிரையண்ட், ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 150 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இன்னும் அறிவியலை நம்புகிறார்கள் என்று அவர் கூறினார். இருப்பினும், 2018-ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. அறிவியல் முன்னேற்றங்களின் பலன்களை மிகக் குறைவாகவே பெறும் சமூகங்களிலேயே இந்த நம்பிக்கை சரிவு மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.
குடிமக்கள் அறிவியலை நம்பும்போது, தங்கள் ஆரோக்கியம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது அறிவியல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. கொள்கை முடிவுகளை எடுக்கும் தலைவர்களும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும்போது, இதே நிலைதான் நீடிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.
இதற்கு உதாரணமாக, அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிரான கருத்துகளையும், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) எபோலா நோய் பரவலின்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மீதான அவநம்பிக்கையையும் கூறலாம். “தடுப்பூசி போடும் விகிதம் குறையும்போது, நோய்கள் மீண்டும் வருகின்றன” என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
நம்பிக்கை குறையும்போது, முதலீடுகளும் குறையக்கூடும் என்று அவர் கூறினார். முதலீடுகள் குறைந்தால், அறிவியல் முன்னேற்றங்களும் குறையும். அதே சமயம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற தொழில்நுட்பங்கள், சுகாதாரத் துறை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அறிவியல் துறையிலும் புதிய சாத்தியக்கூறுகளை மிக வேகமாக உருவாக்கி வருகின்றன என்று பிரையண்ட் குறிப்பிட்டார்.
இந்த புதிய முன்னெடுப்பைத் தொடங்கி வைக்கும் விதமாக, செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் பல கலந்துரையாடல்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், சிவில் சமூகத்தினர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் ஒன்றிணைய உள்ளனர்.
அறிவியலுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதும், அறிவியலுக்கும் கொள்கை முடிவுகளுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதும், தவறான தகவல்களை எதிர்கொள்வதுமே இதன் நோக்கமாகும்.
இதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக, சில ஆய்வகங்களின் ஆராய்ச்சி செயல்முறைகளுக்குத் தரச் சான்றிதழ் (quality label) வழங்கப்படலாம்; இது அந்த ஆய்வகங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு உத்தரவாதமாகச் செயல்படும் என்று உலக சுகாதார நிறுவன அதிகாரி தெரிவித்தார்.
மூலம்- swissinfo


