முல்லைத்தீவு -வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலுக்கு இளைஞர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், விபத்துக்குள்ளானதில், சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் புதுக்குடியிருப்பு – தேராவில் வளைவு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், உழவு இயந்திரம் ஒன்றில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த போது, வேகமாகச் சென்ற உழவு இயந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டது.
இந்த விபத்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.