யாழ்ப்பாணத்தில் தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இன்றும் இடம்பெறமாட்டாது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை அறிக்கையின் பிரகாரம், நேற்று 24 கடல் அதிக கொந்தளிப்பாகக் காணப்பட்டதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி தீவுப் பகுதிகளுக்கான படகுச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன.
நெடுந்தீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கான படகுச் சேவைகளே நேற்று முதல் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், அதிக காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதன் காரணமாக இன்றும் குறித்த 3 தீவுகளுக்குமான படகுச் சேவைகள் இடம்பெறமாட்டாது எனவும் நயினாதீவுக்கான படகுச் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறும் எனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மூன்று தீவுகளும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளன.