15 C
New York
Friday, April 25, 2025

யாழ்ப்பாணத்தில் கைதான போலி வைத்தியரின் அலைபேசிகளில் அதிர்ச்சி படங்கள், காணொளிகள்.

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட போலி வைத்தியர், மாணவிகள் பலருடன் காதல் தொடர்பில் இருந்துள்ளதாகவும், அவரது அலைபேசிகளில், பெண்களின் அந்தரங்கப் படங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞன்  ஒருவர், தன்னை வைத்தியர் என அறிமுகப்படுத்தி , போலியான ஆவணங்களையும் தயாரித்து வெளிநாடுகளில் வசிக்கும் நபர்களை இலக்கு வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

திங்கட்கிழமை யாழ்.நகரப் பகுதியில் அதிசொகுசு காரில் இளைஞன் பயணித்துக் கொண்டிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வேளை இளைஞன் 15 பவுண்  நகையை அணிந்திருந்ததுடன் , 5 இலட்ச ரூபாய் பணம்,   05 அதிநவீன அலைபேசிகள் , பல வங்கி அட்டைகளையும் வைத்திருந்தார்.

இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல போலி உறுதி முடிப்புக்கள் , காணி மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

குறித்த நபர், பாடசாலை மாணவிகள் பலருடன் காதல் தொடர்புகளை பேணி வந்துள்ளதுடன்,  வெளிநாடுகளில் வசிக்கும் தன்னை விட வயது அதிகமான பெண்களுடனும் காதல் தொடர்புகளைப் பேணி அவர்களை மிரட்டி , பல இலட்ச ரூபாய்களைப் பெற்று வந்துள்ளார்.

இளைஞனிடம் இருந்து மீட்கப்பட்ட தொலைபேசிகளில் பல பெண்களின் அந்தரங்க படங்கள் காணொளிகள் உள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இளைஞன் தனித்து குறித்த மோசடிகளில் ஈடுபடவில்லை எனவும் , இவருக்குப் பின்னால் பெரும் கும்பல் ஒன்று மோசடிக்கு உதவி புரிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இளைஞனின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்களை ஆராய்ந்து , இளைஞன் யார் யாருடன் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டார் என்பது தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்து , தொடர்புடைய நபர்களை விசாரணை வலயத்திற்குள் எடுத்து விசாரணை செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை மன்று இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Latest Articles