ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் போட்டியிடவுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக, 7 தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் சிவில் அமைப்புகளின் கூட்டிணைவான தமிழ் தேசிய பொதுச்சபையும் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பு இதனை அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று நடந்த விசேட ஊடகச் சந்திப்பில், பொது வேட்பாளர் அரியநேத்திரனை, மூத்த தமிழ் அரசியல்வாதியும், சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களும், தமிழ் தேசிய பொதுச்சபையில் இடம்பெற்றுள்ள சிவில் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன், ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகவே போட்டியிடுவார் என்றும், அவரது சார்பில் அடுத்த சில நாட்களில் கட்டுப்பணம் செலுத்தப்படும் என்றும் கூறினார்.
பொது வேட்பாளராக களமிறங்கும் அரியநேத்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெருக்கடியான நேரங்களிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்.
அவர் 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட போதும் தெரிவாகவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
பின்னர், 2010ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

