கிளீன் சிறிலங்கா செயலணி நியமனத்தின் மூலம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்,தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய கிளீன் சிறிலங்கா, கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன்,
“கிளீன் சிறிலங்கா கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுகிறது.
இச்செயலணி ஜனாதிபதிக்கு மாத்திரமே பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறது. எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை.
இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு.
இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனர்.
இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை.
அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது“ எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.