உலகளாவிய ரீதியில் தார்மீகத்தின் இருப்புக்கு வழிகாட்டியாகவும், அமைதி, நீதி மற்றும் இரக்கத்திற்காக ஆழமாகவும் கண்ணியமாகவும் குரல் கொடுத்த திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக எனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு நித்திய இளைப்பாற்றிற்காக பிரார்த்திக்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரியவர்களுக்கான திருத்தந்தை முதலாம் பிரான்சிஸ் அவர்களின் மாறாத மனிதநேய நோக்கு உலகளாவிய ஒற்றுமைக்கான அவரது அயராத முயற்சிகள் மற்றும் அவரது ஆன்மீகத் தலைமைத்துவம் என்பன அனைத்து மதங்களையும் சேர்ந்த மில்லியன் கணக்கான மக்களின் இதயங்களைத் தொட்டுள்ளது.
புனித பிரான்சிஸ் அவர்களின் நினைவுகள் இலங்கையிலும் சிறப்பான பக்தியுடன் அனுட்டிக்கப்படுகிறது. 2015 ஜனவரி மாதத்தில் நமது நாட்டிற்கு அவர் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம், பல வருடப் போருக்குப் பின்னர் இலங்கை மக்களை குணப்படுத்திய ஆன்மீக சிகிச்சை மற்றும் மதங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பிற்கான தருணமாக என்றும் மக்களின் நினைவுகளில் நிலைத்திருக்கும்.
அவரது வருகை அமைதி, நம்பிக்கை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு விடுக்கப்பட்ட புதிய அழைப்பாக அமைந்திருந்தது. 1.7 மில்லியனுக்கும் கிட்டிய இலங்கை கத்தோலிக்க சமூகத்தினர், உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்கர்களின் ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கான துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.
மத வேறுபாடு இன்றி அமைதி, சகவாழ்வு மற்றும் மனித மாண்பை மதிக்கும் இலங்கையர்களின் நண்பராகவும், கடினமான காலங்களில் தார்மீக வழிகாட்டியாகவும் அவர் நினைவுகூரப்படுவார்.
இரக்கம், நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான சகவாழ்வுக்கான அவரது முன்மாதிரியான வாழ்க்கை, எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதிய முன்னுதாரணமாக அமையும் என்றும் அவர் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.