சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர், சர்வதேச அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும்போது, ஆங்கிலத்தை தவிர்த்து, பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் அல்லது ரோமன்ஷ் – ஆகிய நாட்டின் நான்கு தேசிய மொழிகளில் ஒன்றைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதிநிதிகள் சபையில் நேற்றுத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சுவிஸ் செனட்டர் கார்லோ சோமருகா இந்த தீர்மான முன்மொழிவைத் தாக்கல் செய்திருந்தார்.
சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றை, தங்கள் அதிகாரப்பூர்வ வேலை மொழிகளாக கொண்ட அமைப்புகளுக்கான விதி இதுவாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தின் மூலம், “பிற நாடுகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுடன் ஆங்கிலத்தில் பேச எனக்கு இனி உரிமை இருக்காது” என்று தற்போது ஜனாதிபதி பதவியை வகிக்கும் சுவிஸ் நிதியமைச்சர் கெல்லர்-சுட்டர் அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல அமைப்புகளின் அதிகாரப்பூர்வ மொழிகள் ஜெர்மன், பிரெஞ்சு மற்றும் இத்தாலியன் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சென்டர் கட்சியின் நிக்கோலோ பகானினி, ஏனைய அனைத்து பங்கேற்பாளர்களும் ஆங்கிலம் பேசும்போது, சுவிட்சர்லாந்து ஒரு மொழிபெயர்ப்பாளரை மேசைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்” என்று வாதிட்டார்.
இதனால், தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறிய போதும், அந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
விதிவிலக்குகள் நிச்சயமாக பொறுத்துக் கொள்ளப்படும் என்று வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியின் ஜீன்-லூக் அடோர் கூறினார்.
இதையடுத்து, பிரதிநிதிகள் சபை 12 மேலதிக வாக்குகளால் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
அதற்கு ஆதரவாக, ர93 வாக்குகளும். எதிராக 81 வாக்குகளும் கிடைத்தன. 15 பேர் வாக்களிக்கவில்லை.
மூலம்-swissinfo