உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலின் போது, போலந்து வான்வெளிக்குள் நுழைந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக போலந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.
போலந்து பிரதேசத்தின் மீது ரஷ்ய ட்ரோன்கள் பறந்ததாக செய்திகள் வெளியானதை அடுத்து, வார்சோ சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
போலந்து மற்றும் நேட்டோ போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின்னர், தரைவழி வான் பாதுகாப்பு மற்றும் ராடர் அமைப்புகள் “மிக உயர்ந்த எச்சரிக்கையை” அடைந்துள்ளதாக போலந்து இராணுவத்தின் செயல்பாட்டுக் கட்டளை தெரிவித்துள்ளது.
“போலந்து வான்வெளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஆயுதப்படைகளின் தளபதி தேவையான அனைத்து நடைமுறைகளையும் செயல்படுத்தியுள்ளார்,” என்றும் அது குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் (FAA) அறிக்கையின்படி, “தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான திட்டமிடப்படாத இராணுவ நடவடிக்கைகள்” காரணமாக வார்சோ சோபின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
நாட்டின் தென்கிழக்கில் உள்ள லுப்ளின் விமான நிலையமும் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
ட்ரோன்கள் மேற்கு நோக்கி நகர்ந்து போலந்து நகரமான ஜமோஸ்க்கை அச்சுறுத்துவதாக உக்ரைனிய விமானப்படை முன்னர் டெலிகிராமில் செய்தி வெளியிட்டிருந்தது – அறிக்கை பின்னர் நீக்கப்பட்டது.
குறைந்தபட்சம் ஒரு ட்ரோனாவது Rzeszów நோக்கிச் சென்று கொண்டிருந்ததாகவும் உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான முக்கிய நேட்டோ மையமாக அங்குள்ள விமான நிலையம் உள்ளது.
போலந்து வான்வெளியில் எத்தனை ட்ரோன்கள் உண்மையில் நுழைந்தன என்பது ஆரம்பத்தில் தெளிவாகத் தெரியவில்லை.
போலந்து பெலாரஸுடனான அதன் கிழக்கு எல்லையை மூடுவதாக அறிவித்துள்ளது.