2026 பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ள சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவா நகரத்தைச் சேர்ந்த சுமார் 1,000 ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரின் பல்வேறுதுறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், தற்போதுள்ள ஊதிய வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், வெற்றிடமாக உள்ள பதவிகளை முடக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கோரி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
துறைசார் வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் மானியங்களை, குறிப்பாக கலாச்சார நிறுவனங்களுக்கு, குறைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
பட்ஜெட்டின் படி, ஊழியர்கள் வாழ்க்கைச் செலவு சரிசெய்தலைப் பெறமாட்டார்கள், பகுதியளவு வருடாந்த சம்பள உயர்வுகளை மட்டுமே பெறுவார்கள். கூடுதலாக, 1,300 ஊழியர்களுக்கான சேவை மூப்பு போனஸ் முடக்கப்படும் – இதன் மூலம் 4 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சேமிக்கப்படும்.
மேலும், மொத்தம் 200 வெற்றிடமாக உள்ள பதவிகளில் 58 தற்போதைக்கு நிரப்பப்படாமல் இருக்கும்.
இந்த சேமிப்பு ஊழியர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு நகர அலுவலகங்களை கடந்து பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
“தெருக்களை சுத்தம் செய்ய வேண்டாம் – குப்பை நகரம்”, “கோபமடைந்த ஆசிரியர்கள்”, “அவர்கள் எங்கள் ஊதியத்தைத் தடுக்கிறார்கள் – நாங்கள் நகரத்தைத் தடுக்கிறோம்” போன்ற முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
நகர சபை சனிக்கிழமை காலை 8 மணிக்கு நிதி வெட்டுக்கள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
மூலம்- bluewin

