மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள எங்கெல்பர்க்-டிட்லிஸ் பனிச்சறுக்கு மையத்தில், நேற்றுக்காலை மலைச்சரிவில் கேபிள் கார் ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் 61 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
அந்தப் பெண் கோண்டோலாவில் தனியாக இருந்ததாக நிட்வால்டன் மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும், விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
கோண்டோலாவின் கபின் கழன்று பலமுறை உருண்டது. “விபத்து நடந்த நேரத்தில், அதில் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்தார். அவர் காயங்களால் உயிரிழந்தார்,” என்று நிட்வால்டன் மாகாண காவல்துறை அதிகாரி செனாட் சாகிக், செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த விபத்து நேற்றுக் காலை சுமார் 11:30 மணியளவில் நிகழ்ந்தது. உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 61 வயதுப் பெண் என அடையாளம் காணப்பட்டார். விபத்துக்கான காரணம் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது.
இது “எதிர்பாராத விதமாக” நிகழ்ந்த ஒரு அசாதாரண நிகழ்வு என்று நிர்வாக இயக்குனர் நோர்பர்ட் பாட் கூறினார்.
எங்கெல்பர்க்-டிட்லிஸ் மத்திய சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பனிச்சறுக்கு மையமாகும், இது கடல் மட்டத்திலிருந்து 1,000 முதல் 3,000 மீட்டர் வரை உயரத்தில் 82 கிலோமீட்டர் தூரத்திற்கு குறிக்கப்பட்ட பனிச்சறுக்கு பாதைகளை வழங்குகிறது.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பனிச்சறுக்கு லிஃப்ட், 2015-ல் திறக்கப்பட்ட டிட்லிஸ் எக்ஸ்பிரஸ் ட்ரூப்ஸீ-ஸ்டாண்ட் கோண்டோலா ஆகும். இந்த லிஃப்டில் உள்ள ஒவ்வொரு கோண்டோலாவிலும் எட்டு பேர் பயணிக்க முடியும் .
விபத்திற்குப் பிறகு கேபிள் கார் இயங்குவதை நிறுத்தியதால், அந்த லிஃப்டில் இருந்த மற்ற 40 கோண்டோலாக்களில் இருந்து 100-200 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பலத்த காற்று காரணமாக புதன்கிழமையன்று ஏராளமான உள்ளூர் பனிச்சறுக்கு லிஃப்டுகள் மூடப்பட்டன.
காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ.ஐ எட்டும்போது லிஃப்டில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும், மேலும் காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ.ஐ எட்டும்போது செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.
புதன்கிழமை அன்று காற்றின் வேகம் எவ்வளவு இருந்தது என்பதும், எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதா என்பதும் துல்லியமாகத் தெரியவில்லை.
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு லிஃப்ட் விபத்துகள் அரிதானவை. மிக மோசமான கோண்டோலா லிஃப்ட் விபத்து 1972, ஜூலை 12 அன்று நிகழ்ந்தது. வாலாய்ஸ் மாகாணத்தில் உள்ள பெட்டன் மற்றும் பெட்மெரால்ப் இடையே பயணித்த ஒரு கேபிள் காரின் இழுவைக் கம்பி அறுந்து போனதால், அது பள்ளத்தாக்கில் வேகமாகப் பின்னோக்கிச் சென்று மோதியது. இதில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்குப் பிறகு, கேபிள் கார்களின் பாதுகாப்பு மீதான நம்பிக்கை சரிந்தது. இது இறுதியில் விதிமுறைகளைக் கடுமையாக்குவதற்கும், அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்வதற்கும் வழிவகுத்தது.
மூலம்- swissinfo

