75ஆவது வயதில் மீண்டும் ஒரு பட்டத்தைப் பெற்று, கற்றலுக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் திரு. நாகேஸ் உருத்திரமூர்த்தி.
சுவிற்சர்லாந்தில் ஆரம்பகாலத்தில் குடியேறிய தமிழர்களில் ஒருவரான இவர், தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு பணிகளை முன்னெடுத்தவர். நீண்டகால மொழிபெயர்ப்பாளராகவும், சுவிற்சர்லாந்தின் முதலாவது தமிழ்ப் பாடசாலையான பாசல் தமிழ்ப் பாடசாலையை உருவாக்குவதில் முன்னின்றவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

மனிதநேயப் பணிகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு, Freiplatzaktion அமைப்பின் உபதலைவராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
சுவிற்சர்லாந்தின் சாரதி அனுமதிப்பத்திரத் தேர்வுக்கான நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததுடன், ஜேர்மன் பேராசிரியர் ஊ. வே. பைசார்த் அவர்களின் தலைமையில், ஓம் திட்டத்தின் ஊடாகத் திருக்குறள், நாலடியார் போன்ற தமிழ் இலக்கியங்களை ஜேர்மன் மொழியில் மொழிபெயர்த்த குழுவிலும் முக்கிய பங்காற்றியவர்.
பாசல் மாநிலத்தில் நீண்டகாலம் வாழ்ந்து, பின்னர் தாயகம் திரும்பி, அடம்பன் பண்ணையை நிறுவி, சமூகப் பணிகளிலும் விவசாயச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
கல்வி, மொழி, இலக்கியம், சமூகப்பணி எனப் பல துறைகளில் தனது தடத்தைப் பதித்துள்ள மூர்த்தி மாஸ்ரர், கற்றலின் மீதான ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் மற்றொரு பட்டத்தைப் பெற்றுள்ளார்.


