0.8 C
New York
Monday, December 29, 2025

ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்டது தொடர்பாக கைதானவர்களுக்கு பிணை.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது கடந்த வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில்  இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் , செவ்வாய்க்கிழமை மூவரை கைது செய்துள்ளனர்.

அச்சுவேலி, மாவிட்டபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களையே பொலிஸார் கைது செய்து , அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் புதன்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து , சந்தேகநபர்கள் மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

ஊடகவியலாளர் வீட்டில் வைத்து தீ மூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றையும் , பொலிஸார் மன்றில் பாரப்படுத்தியதை அடுத்து , அவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க மன்று அனுமதித்துள்ளது.

Related Articles

Latest Articles