வடகிழக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து தெற்கு கன்டோனான டிசினோ வரை செல்லும் A13 நெடுஞ்சாலை, கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையை திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கவுள்ளதாக சுவிஸ் வீதிப் பணியகம் அறிவித்துள்ளது.
200 மீற்றர் நீளத்துக்கு நெடுஞ்சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதனால் நெடுஞ்சாலை எவ்வளவு காலத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சேதத்தின் அளவை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க முடியவில்லை, அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் நிலைமையைப் பற்றிய ஒரு தெளிவு ஏற்படும் என்றும், அவர் கூறியுள்ளார்.
பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட இந்த மூடல் நீடிக்கலாம் என்றும், இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ13, நெடுஞ்சாலையானது, நெரிசல் மிகுந்த கோதார்ட் மலைச் சாலைக்கு ஒரு முக்கியமான மாற்றுப் பாதையாகும்.
கோடைக்காலப் பயணங்கள் தொடங்கும் போது, A13 மூடப்படுவது கோதார்டில் அதிக நெரிசலுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம் – Swissinfo