இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும், அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்கள் வரிசையாக இடம்பெறும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன், தனிநபர் மற்றும் கட்சி சார்பின்றி நாட்டை முதன்மைப்படுத்தி அனைவரும் பொதுவான இணக்கப்பாட்டுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டம் மற்றும் முன்நோக்கி செல்லும் வழிகள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று மாத்தறை கோட்டை விளையாட்டரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
“ஒன்றாக வெல்வோம் – நாம் மாத்தறை ” என்ற தொனிப்பொருளில் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பொதுக் கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.