ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டது குறித்து சுவிஸ் வெளியுறவு அமைச்சர் Ignazio Cassis கவலை தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானில் இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அவரையும் அவரது மெய்க்காவலரையும் கொன்றுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் பதவியேற்பில் பங்கேற்கச் சென்றிருந்த போது இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கு சில மணிநேரம் முன்னதாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் முக்கியமான தளபதி ஒருவரை இலக்கு வைத்து பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
அந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி Fuad Shukr கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
அடுத்தடுத்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.
இதையடுத்து, லெபனானில் உள்ள சுவிஸ் குடிமக்களை சாத்தியமானளவு விரைவாக வெளியேறுமாறு சுவிஸ் வெளியுறவு அமைச்சு இன்று நண்பகல் அறிவுறுத்தியுள்ளது.
லெபனானில் உள்ள சுவிஸ் பிரஜைகளை தங்கள் சொந்த வழியில் அங்கிருந்து வெளியேறுமாறும், லெபனானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும், சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
மூலம்- swissinfo

